Jul 31, 2011

ரமளான் நோன்பு

நோன்பின் அவசியம்
    ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள்மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)
    ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை-தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். (2:185)
    நோன்பின் நோக்கம்
    யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் உண்ணுவதையும் பருகுவதையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை. அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்:புகாரி, அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா
    உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும்போது யாரேனும் அவரிடம் முட்டாள் தனமாக நடந்து கொண்டால் ‘நான் நோன்பாளி’ என்று அவர் கூறி விடட்டும். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: திர்மிதீ
      நோன்பின் சிறப்பு
    ஒவ்வொரு நன்மையான காரியத்துக்கும் பத்து முதல் நூறு மடங்குவரை கூலி கொடுக்கப்படுகின்றது. ‘நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்’ என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம், அல்லாஹ்விடம் கஸ்தூரியின் நறு மணத்தை விட சிறந்ததாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: திர்மிதீ
    சுவர்க்கத்தில் ‘ரய்யான்’ என்றொரு வாசல் உள்ளது. அவ்வழியாக நோன்பாளிகள் (மட்டும்) அழைக்கப்படுவார்கள். நோன்பு நோற்றவர்கள் அவ்வழியாக நுழைவார்கள். யார் அதில் நுழைகிறாரோ அவருக்கு ஒரு போதும் தாகம் ஏற்படாது. அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது رَضِيَ اللَّهُ عَنْهُ  நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ
    நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறவனை சந்திக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: திர்மிதீ
    காலம் முழுவதும் நோற்றாலும் ஈடாகாது
    அல்லாஹ் அனுமதித்த காரணங்களின்றி எவர் வேண்டுமென்றே ரமழானின் ஒரு நோன்பை விட்டாலும் அதற்குப் பகரமாக காலம் முழுதும் நோன்பு நோற்றாலும் அதற்கு ஈடாகாது. ஆதாரங்கள்: அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜ்ஜா
    நோன்பு நோற்க கடமைபட்டவர்கள்,
    நோன்பிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்கள்
    எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பை) பின்வரும் நாட்களில் நோற்கவேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை (அல்குர்ஆன் 2:185)
    பயணம் மேற்கொண்டதும் அவர் நோன்பை விட்டுவிடும் சலுகையைப் பெறுகிறார்.